தமிழ் மரபு அறக்கட்டளை
முதுசொம் கல்வி மேடை
முன்னுரை
தமிழ் மரபு அறக்கட்டளை (த.ம.அ.) பத்து வருடங்களுக்கு மேலாக பலவகைகளில் அரிய தமிழ்த்தொண்டு செய்து வருகிறது. நாம் மாணவசமுதாயத்தை அணுகி, அவர்களின் தேவைக்கேற்ப சில பணிகளை துவக்க வேண்டும் என்ற எண்ணம் நமது சிந்தனைக்களத்தில் அவ்வப்பொழுது நூலிழையாக ஓடுவதுண்டு. இது பற்றி கடந்த சுதந்திர தினமன்று (15 08 2012) லண்டனில் கலந்தாலோசனை நடந்தது. அதன் நற்பயனாக, பொங்கல் திருவிழா கொண்டாடும் நன்னாளில், நமது அறக்கட்டளை முதுசொம் கல்வி மேடையை (THF Study Circle) நிறுவியது மாணவசமுதாயத்துக்கு ஒரு நற்செய்தி. இந்த மேடை செழித்து ஓங்குக. தமிழன்பர்களின் ஆதரவும், ஆர்வமும், ஆக்கப்பூர்வமான தொண்டும் அதனுடைய தரத்தை உயர்த்தட்டும்; விசாலத்தைக் கூட்டட்டும். வானளாவ பறக்க ஊக்கமளிக்கட்டும். நாம் அனைவரும் என்றென்றும் மாணவர்கள். யாவரும் வருக.
தற்காலம் வித்யாதானத்தின் பரிமாணம் விஸ்வரூபம் எடுத்துளது. உலகெங்கும் இலவசமாக தரமுயர்ந்த கல்வி, இணைய தளம் மூலமாக கிடைக்கிறது. தமிழ் நாட்டில் மாணவர்களுக்கு அவற்றின் நற்பயன் கிட்டுவதில்லை என்பதை நான் மாணவன் என்ற முறையில் அறிவேன். படிப்பும், தேடலும், தேர்வும் குறுகிய எல்லைக்குள் சுருங்குவதாலும், மற்ற மொழிகளை புறக்கணிப்பதாலும், பெரும்பாலோர் கிணற்றுத்தவளைகளாக காலம் கடத்துகின்றனர். ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வுகளுக்கு, இவர்களை பேட்டி காணும் போது, என் மனம் வலிக்கும். இரு வருடங்களுக்கு முன் மேற்படி தேர்வுகளுக்கு பயிற்சி பெற வந்த பட்டதாரிகளுக்குக் கல்வி மேடை பாடங்களை துரித கதியில் நடத்திய போது கிடைத்த அனுபவங்கள் தான் இன்றைய கல்வி மேடையின் முன்னோடி.
மின் தமிழ் உறுப்பினர்கள் கல்விமான்கள், வித்வான்கள், மேதைகள், அனுபவஸ்தர்கள், மடலாடுவதில் வித்தகர்கள், வானம்பாடிகள். அவர்கள் எல்லாரையும் கல்வி மேடை போன்ற அமைப்புகள் கவராது. நாமோ மாணவர்களை வலிய இழுக்க ஆசைப்படுகிறோம். அதனால், இது சற்றே வித்தியாசமான கல்வி மேடை; ‘யாமுஞ் சேறுக நீயிரும் வம்மின்...’ என்று முன்கூட்டியே கட்டியம் கூறிவிடுவது விவேகம். கல்வி கற்க வயது வரம்பு ஒன்றுமில்லை. மாணவமனப்பான்மையும், திறந்தவெளி அணுகுமுறையும், வாழ்த்துரையில் கூறியபடி,
‘... முதுசொம் கல்வி மேடை ஒரு கல்விச்சாலை என்று மனதில் வாங்கிக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் போது இருப்பது போல் நூலகத்தில் நடந்து கொள்வதில்லை. கல்லூரியில் வேறுவிதமாய் நடந்து கொள்வோம், இல்லையா? அதே போல் ஒரு கல்லூரி என்று எண்ணி நுழையுங்கள். வெட்டி அரட்டை, கடி ஜோக்குகளுக்கு அது தளமல்ல. சீர்மையுடன் கல்வி கற்போர் உலவும் இடமது. அந்த எண்ணத்துடன் தமிழ்க் கல்வியில் ஆர்வமுள்ளோர் அனைவரும் கலந்து கொள்ளலாம். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் கல்விச் சேவை!...’.
என்ற புரிதலும் போதும். இணையும் நண்பர்களின் கருத்துக்களை பரிசீலித்து, உகந்த முறையில் இந்த கல்விமேடை செயல்படும். அதனால், அனைவரும் பயன் பெறுவது எளிதாக ஆகி விடுகிறது; மாணவ சமுதாயத்தை வலிய இழுக்க, அவரவர்கள் ஒரு சிறிய பணி புரியலாம், விருப்பம் இருந்தால். இரண்டு அச்சுப்பிரதிகள் எடுத்து, ஒன்றை தன் வீட்டு வாசலில் மாட்டி வைத்தால் நாலு பேர் பார்ப்பார்கள். செய்தி பரவும். அறிவியல் பிரசாரம் சூடு பிடிக்கும். இது ராஜாஜி எனக்கு சொல்லிக்கொடுத்த உத்தி. இரண்டாவது பிரதியை அருகில் உள்ள பள்ளியிலோ/ கல்லூரியிலோ கொடுத்து விடலாம். அத்தருணங்களில் தமிழ் மரபு அறைக்கட்டளையின் காப்புரிமை பற்றி கூறுவது முக்கியம். நன்றி நவில்வது நலம். மாணவர்களுக்கு இதுவே முதல் பாடம். அவர்களின் கருத்துக்களை கேட்டு நம்முடன் பகிர்ந்து கொண்டால், கல்வி மேடை வளைந்து கொடுக்கும்.
திட்டம்:
இயன்றதை, பொருத்தமானதை செய்வோம். விரிவாக்கத்துக்கு எல்லை யாதும் இல்லை. ஆர்வம் இருந்தால் நாம் தொடப்போவது தொடுவானம். ஆகையால், ஒரு உத்வேகத்துடன் செயல் படுவோம். இது தான் இலக்கு. திட்டம் மாணவர்களின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படும், முன்னறிவிப்புடன்.
‘தமிழ்’, ‘வரலாறு’, ‘சமூகவியல்’ ஆகிய மூன்று துறைகள் முதலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. திட்டமிட்டப்படி, இந்த மூன்று துறைகளிலும் சில பாடங்கள் ஏற்கனவே பிரசுரம் ஆகியுள்ளன. உரிய வரவேற்பு இல்லையெனில், அவை மாற்றப்படலாம். மற்ற துறைகளை பற்றிய திட்டங்கள் ஒத்திப்போடப்படலாம். உரிய வரவேற்பு என்றால், பரிந்துரைகளின் படி செயல்படுவதும், வீட்டுப்பாடங்களை செய்து அளிப்பதும், பின்னூட்டங்களும், ஆலோசனைகளும் அதில் அடக்கம். அவரவர்கள் வேலைப்பளுவை உத்தேசித்து, தனிமடல்களுக்கும் பதில் அளிக்கப்படும். கல்வி மேடையில், ஆங்கில கலப்பும், சில வடமொழிச்சொற்களும் சகஜமாக இடம் பெறும். பெரும்பாலோர் எளிதில் புரிந்து கொள்ளவேண்டும் என்ற அவாவினால் இந்த தன்னார்வப்பணி உந்தப்படுகிறது. எமக்கு யாதொரு விதமான பேதமும் கிடையாது. அதனால் சேதமும் கிடையாது. நாம் மோதலும் நாடவில்லை.
இத்தகைய பணிகளை தனி ஒருவர் பொறுப்பேற்று நடத்துவது தான் மரபு, நடைமுறை, நிர்வாகம். அந்த பொறுப்பை எனக்கு உவகையுடன் அளித்த தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆணையை சிரமேற்கரம் குவித்து ஏற்றுக்கொண்டு, அதை நிறைவேற்றுவது என் பணி. அதற்கு தமிழன்பர்களின் ஆதரவும், ஆர்வமும், ஆக்கப்பூர்வமான தொண்டும் என்றென்றும் வேண்டும். கல்வி மேடையின் ஆலோசனைக்குழுவாக இயங்க சம்மதித்த திருமதி. கீதா சாம்பசிவம், முனைவர் காளைராஜன், திருமதி. சுபாஷினி ட் ரெம்மல், முனைவர்.நா.கண்ணன், டாக்டர். தேமொழி ஆகியோருக்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆலோசனைக்குழுவின் தொண்டு போற்றத்தக்கதாக அமையும் என்பதால் என் துணிவு கூடுகிறது.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
முதுசொம் கல்வி மேடை: தமிழ் மரபு அறக்கட்டளை
14 01 2013/23 04 2013