Sunday, January 13, 2013

முதுசொம் கல்வி மேடை - எமது பொங்கல், புத்தாண்டுத் திட்டம்


மின்தமிழ் அன்பர்களுக்கு

பொங்கல் வாழ்த்துக்கள்!

இணையம் எனும் ஊடகம் தோன்றிப்பரவியபோது அதன் தலையாய பயனாக உலகம் கருதியது அதன் கல்விப்பரப்பலே. பல நேரங்களில் யாம் யோசிப்பதுண்டு கூகுள் இல்லா உலகம் எப்படி இருக்குமென்று? இணையம் தகவலை அறிய எத்தனையோ புதிய சாளரங்களைத் திறந்துவிட்டிருக்கிறது. எமது முதுசொம் சாளரம் (www.tamilheritage.org) அதிலொன்று. அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழ் இணைய மாநாட்டில் இச்சாளரத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு தேர்வு வைத்து, பரிசளிக்கப்பட்டது. இன்றும் எம் மின்னூலகம் ஒரு முக்கியக்கல்விக்கூடமாகத் திகழ்கிறது. அது தவிர, எம் மணிமண்டபம்! அதுவொரு கலாசாலை என்பதை மறுக்க முடியுமோ? மண்ணின் குரல் (podcast) ஒலிப்பதிவுகளில்தான் எத்தனை புதிய சேதிகள்!  இதோ! இந்த மின்தமிழ்! கல்வி கரையில என்றார்கள் முது தமிழர்.
உண்மைதான்! எத்தனைச் சாளரங்களைத் திறந்தாலும் கல்வி கரையற்று விரிந்து கொண்டே இருக்கிறது. கற்பதற்குத்தான் முடிவுண்டோ?

மின்தமிழில் இணைந்தது முதல் கல்விச்சேவை பற்றிப் பேசி வருபவர், நம்
இன்னம்புரான் ஐயா. இங்கு பெற்ற அனுபவத்தை வைத்து அவர், “முதுசொம் கல்வி மேடை” எனும் புதிய திட்டத்தை எங்கள் ஆலோசனைக்கு வைத்தார். அவரது குறி!

வரும்காலத்தமிழன். இன்றைய மாணவர்கள். இவர்களுக்கு கற்க வேண்டியதைத் தடையின்றி அளித்துவிட்டால் தமிழர் வாழ்வு வளம்பெறும் என்பது வெள்ளிடைமலை!

மின்தமிழின் அறிவியற்திறத்தை குவிமையப்படுத்தி கற்றோரின் சிந்தனை கற்கும்மாணவர்களுக்குப் போய்ச்சேருமாறு ஒரு தளம் அமைத்தால் என்ன? என்று ஆலோசனை வழங்கினார். எங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவில் இதை ஏற்று நடத்த முடியுமா? என்று மறுகேள்வி போட்டோம். தானே முன்னிருந்து நடத்த முன்வந்திருக்கிறார் திரு.இன்னம்புரான். இத்திட்டம் பற்றிய முழு விவரங்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்வார்.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நாங்கள் சொல்லும் கூகுள் சமூகத்தில்
(Google Plus Community) இணைந்து கொள்ள வேண்டியதுதான்.  இப்பதிவைப் பார்த்த மாத்திரத்தில் பெரியவர் தனது முன்னுரையை இங்கு வழங்குவதுடன்,
முதல் பாடத்தை முதுசொம் கல்வி மேடையில் வைப்பார். பிற விவரங்களை
பெரியவரின் முன்னுரைக்குப் பின் தருகிறோம்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், நடைமுறையில் அதுவொரு மடலாடல் போல் தோன்றினாலும், அது மடலாடல் அல்ல. முறைமை ஒன்றே. ஆனால் அதுவொரு கல்விச்சாலை என்று மனதில் வாங்கிக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் போது இருப்பது போல் நூலகத்தில் நடந்து கொள்வதில்லை. கல்லூரியில் வேறுவிதமாய் நடந்து கொள்வோம், இல்லையா? அதே பொல் முதுசொம் கல்வி மேடை ஒரு
கல்லூரி என்று எண்ணி நுழையுங்கள். வெட்டி அரட்டை, கடி ஜோக்குகளுக்கு அது தளமல்ல. சீர்மையுடன் கல்வி கற்போர் உலவும் இடமது. அந்த எண்ணத்துடன் தமிழ்க் கல்வியில் ஆர்வமுள்ளோர் அனைவரும் கலந்து கொள்ளலாம். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் கல்விச் சேவை!

உங்கள் ஆதரவுடன் இது செம்மையாய் நடைபெற உங்கள் ஒத்துழைப்பை நாடும்,

நா.கண்ணன்
சுபாஷினி டிரம்மல்
தமிழ் மரபு அறக்கட்டளை.